அணு ஆயுத சோதனை நடத்தியாக வேண்டும் என்று நமது நாடு கருதினால், அதனை செய்வதற்கு எந்தத் தடையும் 123 ஒப்பந்தத்தில் இல்லை, ஆனால் அதற்கான எதிர் விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறிய பிரணாப் முகர்ஜி, “அணு ஆயுத சோதனை நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு நாடும் ஒரு நெறிமுறையை வைத்துள்ளது, அதுபோன்று அவசியம் ஏற்பட்டால் அப்படிப்பட்ட சோதனை நடத்துவதற்கு இந்தியாவிற்கும் இறையாண்மை ரீதியிலான அந்த உரிமை உண்டு. அதே நேரத்தில் சோதனை நடத்தப்படுவதால் உருவாகும் எதிர் விளைவுகளையும் நாம் சந்திக்க வேண்டும்” என்று கூறியவர், 1974லிலும், 1998லும் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
அணு ஆயுத பரவல் தடுப்பு நோக்கங்களை நிறைவேற்றவும், அணு ஆயுத சோதனை நடத்துவதில்லை என்ற தனித்த சுய கட்டுப்பாட்டை காப்பது என்றும் மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை பாரதிய ஜனதா கட்சி எதிர்த்துள்ளதே என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 1998ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனைக்குப் பிறகு இதற்கு மேல் அணு ஆயுத சோதனை நடத்துவது இல்லை என்று முடிவெடுத்ததே பாரதிய ஜனதா தலைமையிலான தேச ஜனநாயக கூட்டணி அரசுதான் என்றும், விரிவான சோதனைத் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடத் தயார் என்று அறிவித்தது அன்றையப் பிரதமர் வாஜ்பாய்தான் என்று குற்றம் சாற்றியுள்ளார்.
ஆனால் அணு ஆயுத பரவல் தடுப்பு (என்.பி.டி.), விரிவான சோதனைத் தடை (சி.டி.பி.டி.) ஆகிய உடன்படிக்கைகளில் கையெழுத்திடாமலேயே என்.எஸ்.ஜி.யின் ஒப்புதலைப் பெற்றது சாதாரண சாதனையல்ல என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.