Publish Date: Tue, 16 Sep 2008 (17:19 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
அண்மையில் அதிகரித்துள்ள பயங்கரவாத தாக்குதல்களால் அதிருப்திக்கு ஆளாகியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை விரும்பினால் பதவி விலகத் தயார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து என்.டி.டி.வி. க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "காங்கிரஸ் தலைமையின் ஆதரவு எனக்கு இல்லை என்றால், நான் பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை. கட்சித் தலைமையின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே நான் பதவியில் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் குண்டுகள் வெடித்த சனிக்கிழமை இரவில் அவர் (பாட்டீல்) மூன்று முறை உடை மாற்றினார் என்று எழுந்துள்ள விமர்சனம் பற்றிக் கேட்டதற்கு, "இந்தப் பிரச்சனையை நான் மக்களிடம் விட்டுவிடுகிறேன். ஒரு அரசியல்வாதியை விமர்சிக்கும் முறை இதுதானா. நீங்கள் அவரது கொள்கைகளை விமர்சிக்கலாம். உடைகளை விமர்சிக்கக் கூடாது" என்றார் பாட்டீல்.