இடதுசாரி பயங்கரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது பற்றிக் கவலை தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பயங்கரவாத நடவடிக்கைகளை உடனுக்குடன் முறியடிக்கும் வகையில் நவீனத் தகவல் பறிமாற்றத் தொழில்நுட்ப வசதிகளுடன் தனிப் புலனாய்வு அமைப்பு தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
உள் நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள விடயங்கள் பற்றி விரிவாக விவாதிக்க தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடக்கவுள்ள ஆளுநர்கள் கூட்டத்தை இன்று துவக்கி வைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், "வன்முறைகள், இடதுசாரி பயங்கரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதுதான் தற்போது நம் முன் உள்ள மிகப்பெரிய சவால் ஆகும். பல்வேறு குறிக்கோள்களுடன் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் நீண்டகாலப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவை ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் தன்மையுடன் அரசிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றன." என்று குறிப்பிட்டார்.
நமது நாட்டின் பாதுகாப்பும் ஒருமைப்பாடும் எல்லை தாண்டி ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளின் பெருமளவு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள நிலையில், உள் நாட்டில் இயங்கிவரும் இடதுசாரி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளும் மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியுள்ளது என்றார் அவர்.
தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை குறிப்பிட்ட பிரதீபா பாட்டீல், பெரு நகரங்களைக் குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை உடனடியாக முறியடிக்காவிட்டால், அது அளப்பரிய கவலை தரும் விடயமாக மாறிவிடும் என்று எச்சரித்தார்.
இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை உடனுக்குடன் முறியடிக்கும் வகையில் நவீனத் தகவல் பறிமாற்றத் தொழில்நுட்ப வசதிகளுடன் தனிப் புலனாய்வு அமைப்பு தேவை என்று வலியுறுத்தினார் பிரதீபா பாட்டீல்.