ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் இந்திய அரசு வலியுறுத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த பாதுகாப்புத் துறை தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், சிறிலங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டையில் பொது மக்கள் ஒருபோதும் பாதிக்கப் படக்கூடாது என்று வலியுறுத்தினார்.
அண்டை நாடுகளுடன் பகைமையை வளர்க்கும் நாடுகள் மற்றும் உள்நாட்டு போரில் ஈடுபடும் விடுதலைப் புலிகள், தலிபான்கள் போன்றோர்களால் சர்வதேச பாதுகாப்புக்கு குந்தகம் விளைகிறது என்றார் அவர்.
நமது நாட்டில் நாச வேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாக தெரிவித்த அவர், காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவதற்கு வசதியாக பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி பீரங்கி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
சர்வதேச சமுதாயத்தின் அமைதிக்காகவும், ஸ்திரத்தன்மைக்காகவும் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும், மியான்மர் நில நடுக்கத்திற்குப் பிறகான மீட்புப் பணிகள், லெபனான் போரின்போது இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது ஆகிய பணிகளில் இந்தியா திறம்பட செயலாற்றியுள்ளது என்றும் அமைச்சர் அந்தோணி குறிப்பிட்டார்.