ஒரு வழக்கறிஞரின் நடத்தை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்தால், அவர் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக முடியாதவாறு தடை விதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஜார்கண்டை சேர்ந்த வழக்கறிஞர் கே.கே.ஜா என்ற கமல் என்பவர் ஜார்கண்டில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ஒரு ஆண்டிற்கு ஆஜராக முடியாதவாறு அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு, "ஒரு வழக்கறிஞர் என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால் நீதிமன்றம் அமைதியாகவே இருக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியது.
மேலும், "பார் கவுன்சிலால் ஒரு வழக்கறிஞரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவோ அல்லது நிரந்தரமாக ரத்து செய்யவோ மட்டுமே முடியும். ஆனால் ஒரு நீதிமன்றத்தால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் குறிப்பிட்ட காலத்திற்கு எந்த நீதிமன்றத்திலும் ஆஜாராகி வாதாட முடியாதவாறு தடை விதிக்க முடியும்" என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.
இந்த வழக்கை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், அதே காலத்திற்குள் உயர் நீதிமன்றம் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.