கர்நாடகாவில் கிறித்தவ வழிபாட்டுக் கூடங்களின் மீது விஸ்வ இந்து பரிஷத் (வி.இ.ப.), பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காவலர்கள் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர்.
கர்நாடகத்தில் சிக்மகளூர், உடுப்பி, தக்சின கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் 12 க்கும் மேற்பட்ட கிறித்தவ வழிபாட்டுக் கூடங்களை விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்கிச் சேதப்படுத்தினர். தக்சின கன்னடா மாவட்டத்தில் மட்டும் 8க்கும் மேற்பட்ட வழிபாட்டுக் கூடங்கள் தாக்கப்பட்டதுடன், ஒருவர் கடுமையாக அடித்துக் காயப்படுத்தப்பட்டார்.
மங்களூரில் ஹம்பனகட்டா, குலுர், கொடிக்கல் ஆகிய இடங்களில் தலா மூன்று வழிபாட்டுக் கூடங்களும், புத்தூர் தாலூகாவில் நெட்டனா, பெல்தாங்கடி தாலூகாவில் மதன்டியார், மூட்பிட்ரி, புத்தூர், பெர்மன்னூர், தொக்கொட்டு ஆகிய இடங்களில் தலா ஒரு வழிபாட்டுக் கூடமும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கன்கனடி என்ற இடத்தில் வழிபாட்டுக் கூடத்தைத் தாக்கும் முயற்சியைத் தடுத்த காவலர்கள், 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
மங்களூர், பெல்தாங்கடி ஆகிய இடங்களில் தடியடி நடத்தியும் கலவரம் கட்டுக்குள் வராததால் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதுடன், ரப்பர் குண்டுகளாலும் காவலர்கள் சுட்டனர். அப்போது காவலர்களின் மீது வன்முறையாளர்கள் கற்களை வீசித் தாக்கினர்.
இந்த மோதல்களில் 10 காவலர்கள், 3 பெண்கள் உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து மங்களூர் தாலூகாவில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்து அமைப்பினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், தங்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் இன்று பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.