தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அமைச்சரவை செயலர் கே.எம். சந்திரசேகர், உள்துறை செயலர் மதுக்கர் குப்தா, உளவுத் துறை இயக்குனர் பி.சி. ஹல்தார், டெல்லி காவல் துறை ஆணையர் தத்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை செயலர் மதுக்கர் குப்தா, டெல்லியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆலோசனை செய்யப்பட்டது என்றார்.
டெல்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தப்படுவது பற்றியும், பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார்.
இதற்கிடையே இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.