தலைநகர் டெல்லியில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானவர்கள் பலியானார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று டெல்லியின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
முதல் குண்டு, மத்திய டெல்லியில் கரோல் பாக் பகுதியில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும் கபார் சந்தைப் பகுதியில் வெடித்தது. அதைத் தொடர்ந்து கன்னாட் பிளேஸ் பாலிகா பஜார் பகுதியிலும், கிரேட்டர் கைலாஸ் சந்தைப் பகுதியிலும் அடுத்தடுத்து 6 இடங்களில் மொத்தம் 7 குண்டுகள் வெடித்தன.
டெல்லியை உலுக்கிய இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 20 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
தலைவர்கள் கண்டனம்: இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்களும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே டெல்லியை உலுக்கிய இந்த பயங்கர குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்பதாக அறிவித்துள்ளது.