இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு விற்கப்படும் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் தடையின்றி வழங்கப்படும் என்ற உறுதிமொழி அரசியல் ரீதியான உத்தரவாதமே தவிர, சட்டப்பூர்வமானதல்ல என்று அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்து நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரி அமெரிக்க நாடாளுமன்றங்களுக்கு கடிதத்தில் அதிபர் புஷ், எரிபொருள் வழங்கல் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களின்படி, இந்திய அரசு இதுவரை தெரிவித்து வந்த விவரங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமானது அல்ல என்பதும், இது தொடர்பாக தவறான தகவல்களைத் தந்து மத்திய அரசு மக்களை திசை திருப்பு வந்துள்ளது என்றும் இடதுசாரிகளும், பாரதிய ஜனதா கட்சியும் குற்றம் சாற்றியுள்ளன.
அதிபர் புஷ் எழுதியுள்ள கடிதத்தின் காரணமாக எழுந்துள்ள இந்தப் புதிய சிக்கல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு வட்டாரங்கள், எரிபொருள் வழங்கல் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகத்திற்கு அமெரிக்க அரசிடம் விளக்கம் பெறப்படும் என்று கூறியுள்ளன.
இதற்கிடையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி, அமெரிக்க அதிபரே நேரடியாக வழங்கியுள்ள அந்த உறுதிமொழி, அந்நாட்டு அரசின் அனுமதியாகவே கருதப்படும் என்பதால் 123 ஒப்பந்தம் குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசின் சார்பாக அதிபர் புஷ் அளித்துள்ள உறுதிமொழிகள் அனைத்தும் அந்நாட்டு சட்டத்திற்கும், கொள்கைகளுக்கும் உட்பட்டு நிறைவேற்றப்படும் என்று கூறினார்.