இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்க ராணுவத்துக்கு இந்திய அதிகாரிகள் உதவி செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தனது மெளனத்தை களைத்து உண்மையை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"இலங்கையில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முழு அளவிலான போர் நடந்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஐ.நா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைப்பதில் சிறிலங்க அரசு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு மருந்து, உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது" என்ற ராஜா, "காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ராஜபக்ச அரசிற்கு உதவுகிறதா என்பது குறித்த பல கேள்விகளுக்கு மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது. இதில், உண்மையை தெளிவுப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.