இந்திய-பிரான்ஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் 15-வது இந்திய- பிரான்ஸ் கூட்டுக் குழுக் கூட்டம் வரும் 15, 16ஆம் தேதிகளில் புது டெல்லியில் நடைபெறுகிறது.
அதிகாரிகள் அளவிளான கூட்டம் வரும் 15ஆம் தேதி, வர்த்தகத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக கூடுதல் செயலர் ராகுல் குல்லார் தலைமையில் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து வரும் 16ஆம் தேதி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத், பிரான்ஸ் அயல்நாடு வர்த்தக இணை அமைச்சர் ஆன்னி மேரி இட்ராக் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெறுகிறது. இதையடுத்து பிரான்ஸ் பிரதிநிதிகளையும் கமல்நாத் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை அதிகரிப்பது, முதலீட்டை உயர்த்துவது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அறிவுசார் சொத்துரிமை (IPRs) மீதான ஒத்துழைப்பு குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விவசாயம், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு, போக்குவரத்து, எரிசக்தி, கனிப்பொருள் ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை செய்கின்றனர்.
இந்த இந்திய-பிரான்ஸ் இணைக்குழு கூட்டத்தின் ஒப்பந்தத்தில் இரு நாட்டு அமைச்சர்களும் வரும் 16ஆம் தேதி கையெழுத்திடுகின்றனர்.
இந்த கூட்டத்தில் வணிகத் துறை செயலர் ஜி.கே. பிள்ளை, தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (DIPP) செயலர் அஜய் சங்கர், எரிசக்தி, ரயில்வே, தொலைத் தொடர்பு, நகர்ப்புற மேம்பாடு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, சுரங்கம், தபால் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.