அயல்நாடு வாழ் இந்திய கணவர்களால் கைவிடப்படும் இந்தியப் பெண்களைக் காக்க கட்டாய திருமண பதிவு, உரிய அடையாளம் மற்றும் அடிச்சுவடு முறை, குடும்ப நீதிமன்றங்கள் வாயிலாக வழக்குகளில் விரைவான தீர்வு, தாக்கீது, அழைப்புகளில் அதிக செயல்திறனுள்ள சேவை, அயல்நாடுகளில் உள்ள வழக்குகளைப் பாதுகாக்க அதிக நிதி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உரிய நேரத்தில் வழக்குகளைப் பதிவு செய்தல், அயல் நாடுகளுடன் தகுந்த இருதரப்பு ஒப்பந்தங்கள், எதிர்காலம் பற்றி புது மணப்பெண்ணுக்கு கல்வி அளிக்க தகவல் சேவை போன்ற இதர நடவடிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
புது டெல்லியில் இன்று அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி தலைமையில் உள்துறை அமைச்சக கூட்டம் நடந்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ரேணுகா தேவி, பிற அமைச்சகங்களில் பிரதிநிதிகள், நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
அயல்நாடு வாழ் இந்தியர்களுடன் திருமணம் செய்து கொள்ளும் இந்தியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சக துணை குழு அளித்த பரிந்துரைகள் இந்த கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் நடைபெறும் அனைத்து திருமணங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கான திருமணப் பதிவு முறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதில் அந்த நபர்களை அடையாளம் காண உதவும் வகையில் தேவையான அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
திருமணம் செய்பவர் அயல்நாடு வாழ் இந்தியராக இருந்தால் திருமணப் பதிவு விண்ணப்பத்தில் சமூகப் பாதுகாப்பு எண், கடவுச் சீட்டு பற்றிய விவரங்கள், அடையாள அட்டை, தொழிலாளர் அட்டை போன்ற அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடிச்சுவடு முறைக்கு தேவையான பகுதிகள் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். சட்டம் மற்றும் நீதித்துறை மாநில அரசுகளுடன் இதனை கலந்தாலோசித்து உரிய படிவத்தை தயார் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பெண்களின் நலனுக்கான தேசிய ஆணையம், அயல்நாடு வாழ் இந்திய கணவர்களால் துன்புறுத்தப்படும் இந்தியப் பெண்கள் அளிக்கும் புகார்களை வாங்குவது, அதன் மீது நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை தேசிய அளவில் மேற்கொள்ளும் ஒத்துழைப்பு முகமையாக இருக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உள்துறை அமைச்சக கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள் மற்றும் பிற முகமைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.