பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் வழிகளை வர்த்தகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி 'முசாபராபாத் சலோ' என்ற பேரணி நடத்தத் திட்டமிட்டதை அடுத்துக் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மிதவாத ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாஸ் மெளல்வி ஒமர் பரூக் இன்று அதிகாலை விடுதலை செய்யப்பட்டார்.
மேற்கண்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையது அலி ஷா கிலானி, ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் முகமது யாசீன் மாலிக் ஆகிய இரண்டு பேரும் தொடர்ந்து வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் விடுவிக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிலானி அடைக்கப்பட்டுள்ள அவரது ஹைடெர்போரா வீட்டின் முன்பு ஏராளமான காவலர்களும், மத்திய ரிசர்வ் காவலர்களும் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும், மசூதியில் சென்று தொழுகை நடத்துவதற்குக் கூட கிலானிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் பேச்சாளர் கூறினார்.
ஸ்ரீநகருக்கு அருகில் மைசுமா என்ற இடத்தில் ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் சிறை வைக்கப்பட்டுள்ள அந்த அமைப்பின் தலைவர் மாலிக்-இன் வீட்டிற்கு முன்பும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.