Newsworld News National 0809 12 1080912014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூருவில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

Advertiesment
பெங்களூரு பாஜக தேசிய செயற்குழு கூட்டம் எல்கேஅத்வானி ராஜ்நாத் சிங் அணுசக்தி ஒப்பந்தம்
, வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (11:41 IST)
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் 2 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான உத்திகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே. அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, வெங்கய்யா நாயுடு உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதையடுத்து, மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டு வெற்றிபெற்றது.

இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது.

இதுபோன்ற அரசியல் சூழ்நிலையில் மக்களவைத் தேர்தல் எப்ப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால், தேர்தல் குறித்து பாஜக விவாதிக்க உள்ளது.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான தனஞ்செய குமார், அரசியல், பொருளாதார, சமூக நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

என்றாலும் விவாதிக்கவிருக்கும் முக்கியப் பிரச்சினை பற்றி மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றார் அவர்.

நாடு முழுவதிலும் இருந்து பாஜக நிர்வாகிகள் சுமார் 260 பேர் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தை முறையாக நடத்துவதற்கு கர்நாடக பாஜக சார்பில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெங்களூருவில் தேசிய செயற்குழு நடத்தப்படுவது இது 4வது முறை என்றாலும், கர்நாடக மாநிலத்தில் அக்கட்சி ஆட்சிக்கு வந்த பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தவிர, அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை முடிவு செய்யும் கூட்டமாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்த பிரச்சினை மட்டுமின்றி விலைவாசி உயர்வு, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்டுள்ள பணவீக்க உயர்வு, அமர்நாத் நில விவகாரம் போன்றவையும் பாஜக செயற்குழுவில் விவாதிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil