நாட்டில் உள்ள தபால் நிலையங்கள் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு சம்பளமாக ரூ.2,900 கோடியை வழங்கியுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 21 மாநிலங்கள் முழுவதும் உள்ள 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் (தலைமை தபால் நிலையங்கள், துணை தபால் நிலையங்கள், தபால் நிலைய கிளைகள் உள்பட) இந்த சம்பளத்தை வழங்கியுள்ளன.
கடந்த ஜூலை 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு (NREGS) சம்பளம் வழங்குவதற்காக மொத்தம் 1.47 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 94 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் நடக்கும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக மட்டுமே அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதையடுத்து, தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.), பி.எஸ்.என்.எல்., நிறுவனங்களுடன் சேர்ந்து மின்னணு முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை அஞ்சல் துறை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.