காஷ்மீருக்கும், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்கும் இடையே - கட்டுப்பாட்டை எல்லைக் கோட்டைத் தாண்டி இரு தரப்பு மக்களும் வணிகம் செய்துகொள்ள அனுமதிப்பு தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் தீவிரம் காட்டிவருவதாக செய்திகள் கூறுகின்றன.
பாகிஸ்தானின் புதிய அதிபராக பெறுப்பேற்றப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆசிஃப் அலி சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஒரு புதிய செய்தி விரைவில் வெளிவரும் என்று கூறியதையடுத்து, பாகிஸ்தானில் அது குறித்த ஊகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்துவரும் காஷ்மீர் சிக்கலிற்கு தீர்வு காணும் நல்லெண்ண முயற்சியாக, காஷ்மீரின் இரு பகுதி மக்களும் தங்களுக்கு இடையே தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள அனுமதிப்பது என்று இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கோட்டுப் பகுதியில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முழு அளவு வணிகத்திற்கு திறந்தவிடுவது என்று இந்தியா அளித்த யோசனையை பாகிஸ்தான் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இம்முடிவை நடைமுறைப்படுத்த இந்தியா விரும்புகிறது.
கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் வணிகத்திற்கு அனுமதிக்கப்படும் பொருட்கள் பற்றிய விவரப் பட்டியலை அளிக்குமாறு இந்தியாவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. அந்தப் பட்டியல் மீதான இரு தரப்பு சந்திப்பிற்குப் பிறகு உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் காஷ்மீர் தொடர்பான புதிய செய்தியை எதிர்பாருங்கள் என்று அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கூறினார். ஆனால் அந்த அறிவிப்பு எப்பொழுது வரும் என்பது குறித்துதான் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இம்மாத இறுதியில் வாஷிங்டனில் நடைபெறவுள்ள ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி சந்தித்துப் பேசுவார் என்றும், அந்தச் சந்திப்பிற்குப் பிறகு காஷ்மீர் தொடர்பான - கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிய வர்த்தகத்திற்கு இருநாடுகளும் அனுமதிக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் ஜம்முவில் எதிர்விளைவுகளை உருவாக்கியதையடுத்து, முசாபராபாத் சலோ என்ற முழக்கத்துடன் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் பேரணி அறிவித்து, அதன் காரணமாக கலவரம் வெடித்து, காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டதையடுத்து, கலவரம் காஷ்மீர் முழுவதும் பரவியது.
இந்த நிலையில், ஜம்முவில் எழுந்துள்ள எதிர்ப்பின் காரணமாக காஷ்மீரில் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் உருவாவதை இந்திய அரசு விரும்பவில்லை. இதன் காரணமாகவே கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வணிகத்தை திறந்துவிடுவதில் இந்தியா தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் கூறுகின்றன.