சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவறைத் தாண்டி ஜம்மு- காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நமது ராணுவத்தின் உயரதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதாகவும், அதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜம்முவில் இன்று நடந்த ராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு பகுதியின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் தேஜ் சப்ரூ தலைமை ஏற்று, ஆலோசனைகளை ஒருங்கிணைத்தார்.
துணை ராணுவப் படை உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள், எல்லைப் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.