மேகாலயாவில் உள்ள மேற்கு காசி மாவட்டத்தில் யுரேனியம் கடத்தல் தொடர்பாக 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு காசி மாவட்ட மலைக் கிராமத்தில் ஒருவரிடம் இருந்து சந்தேகத்திற்குரிய பொட்டலம் ஒன்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்தபோது, அது யுரேனியம் என்று தெரியவந்துள்ளது.
அந்தப் பொட்டலத்தில் மத்திய அரசின் அணு சக்தி எரிபொருள் தாதுத் துறையின் முத்திரை இருந்ததை அடுத்து, பொட்டலத்தை வைத்திருந்தவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அணு சக்தி எரிபொருள் தாதுத் துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகனைத் தேடி வருவதாகவும் மேற்கு காசி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் எம்.கார்கராங் தெரிவித்தார்.
"மத்திய அரசு ஊழியர் யாருக்கும் இதில் தொடர்புள்ளது என்று உறுதியாகக் கூற முடியாது. இருந்தாலும், ஊழியர் ஒருவரின் மகனுக்கு இதில் தொடர்புள்ளது." என்றார் அவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல யுரேனியம் விற்க முயன்ற 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.