குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் 9 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
பஞ்சமால் மாவட்டத்தில் உள்ள மூவாடி கிராமத்தைச் சேர்ந்த சில பக்தர்கள், பானாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவிலுக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தாங்கள் வந்த வாகனத்தை மலப்பூர் தாலுகாவில் உள்ள மொடுங்கிரி கிராமம் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்தனர். இந்த வாகனத்தில் பக்தர்கள் ஏராளமானோர் இருந்தனர்.
அப்போது நிறுத்தப்பட்டிருந்த இந்த வாகனத்தின் மீது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் அந்த வாகனம் நொறுங்கியதில் அதில் இருந்த 9 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.