புகையிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.22 லட்சத்தை மத்திய சுகாதார அமைச்சகம் ஒதுக்கியுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் இது தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக தேசிய ஆலோசனை கருத்தரங்கை புதுடெல்லியில் அவர் இன்று துவக்கி வைத்தார்.
புகையிலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைப் பற்றியும், இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2003-ஐ சிறப்பாக அமல்படுத்துவது பற்றியும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் ஆலோசிக்கப்படுகிறது.
இதில் பேசிய அமைச்சர் அன்புமணி, அக்டோபர் 2ஆம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிப்பதன் மூலம் மத்திய அரசு புகையிலைக்கு எதிராக தொடர்ந்து தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நம்முடைய அனைத்து உடல்நலப் பிரச்சினையிலும் 40 விழுக்காடு புகையிலை தொடர்பானதுதான் என்றும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு இதுதான் சரியான தருணம் என்றும் அவர் கூறினார்.
புகையிலைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்களிடம் எடுத்து கூறப்பட்டு வருகிறது என்றும் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட 13 விழுக்காடு குழந்தைகள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புகையிலை குறித்து குறிப்பாக பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.22 லட்சத்தை மத்திய சுகாதார அமைச்சகம் ஒதுக்கியுள்ளது என்றும் அன்புமணி குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்காக உதவி செய்ய சிகிச்சை நிலையங்களை அரசு அமைக் உள்ளது.
முதலில் 100 சிகிச்சை நிலையங்களுடன் அரசு இதனை தொடங்குகிறது. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் இது போன்ற வசதியுடைய சிகிச்சை நிலையங்களை தொடங்க கேட்டுக்கொள்ளப்படும். 2 ஆண்டுகளுக்குள் இது போன்ற 1,000 சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அன்புமணி கூறினார்.