நமது நாட்டின் பாதுகாப்பு, இராணுவ தொடர்பான விவரங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தகவல்களும், விவரங்களும் பொது மக்களின் பார்வைக்கு வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த தேச புள்ளியியல் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் பொது மக்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள இந்த ஏற்பாட்டைச் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
“தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பணம் செலுத்தி தகவல் மற்றும் விவரங்களைப் பெறுவதற்கு பதிலாக, அவர்கள் கேட்காமலேயே எவ்வித செலவும் செய்யாமல் அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பும் விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த ஏற்பாடு இருக்கும். விவரம் தெரிந்த பொது மக்களால் பார்க்கக் கூடியதாக இருக்கும் என்பதால் அந்த விவரங்களும் துல்லியமாக இருக்கும்” என்று கூறினார்.