மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் முயற்சித்து வருவதாக மத்தியில் ஆளும் ஐ.மு.கூ. அரசை எச்சரித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த அமைப்புகளின் மீது தேசியப் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கு வி.எச்.பி., பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் அந்த அமைப்புகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பு, மராட்டிய மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் ஆகியவற்றில் இந்துத்துவா அமைப்புகளுக்குத் தொடர்புள்ளதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள பிருந்தா, அவை குறித்து மத்தியப் புலனாய்வுக் கழக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தான் மாநிலங்களவையில் வலியுறுத்தியதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
"தேவாலயங்கள், வழிபாட்டுக் கூடங்கள், வீடுகள் உள்ளிட்ட கிறிஸ்தவர்களின் சொத்துக்களைத் தீயிட்டுக் கொளுத்தியதன் மூலம், ஒரிசாவில் தனது கோர முகங்களை இந்த இரு அமைப்புகளும் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளன." என்று குறிப்பிட்டுள்ள பிருந்தா, அண்மையில் கான்பூரில் வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் பஜ்ரங் தள் ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தைச் சுட்டிக்காட்டி உள்ளார்.