பிரிவினைவாதிகள் தங்களின் போராட்டத்தைத் தளர்த்திக் கொண்டுள்ளதால், 4 நாட்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலை திரும்பத் துவங்கியுள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமை முதல் தாங்கள் நடத்தி வந்த முழு அடைப்புப் போராட்டத்தைப் பிரிவினைவாதிகள் தளர்த்திக் கொண்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று அதிகாலை முதல் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் வழக்கம்போலச் செயல்படத் துவங்கியுள்ளன.
தெருக்களில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல உள்ளது. வங்கிகள், அரசு அலுவலகங்களும் வழக்கம்போல இயங்கி வருகின்றன.
இருந்தாலும், ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு மேல் முழு அடைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கடைகள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அந்தக் குழு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் செல்லக் கூடிய எல்லாச் சாலைகளையும் வர்த்தகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்றும், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக் கிழமை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான ஜாவித் அகமதுவின் இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாகப் பங்கேற்றனர்.