மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதியை உலக மது ஒழிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் இரண்டு முக்கியமான கூட்டங்கள் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தென் கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மண்டல ஆணைய கூட்டத்தை அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி புதுடெல்லியில் துவக்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களையும், எதிர்காலத்திற்கான கொள்கை நெறியையும், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்தாய்வு செய்யவிருக்கின்றனர். மேலும் மனிதனின் உடல் நலத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தையும், ஆரம்ப சுகாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவது குறித்தும் ஆராய உள்ளனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அன்புமணி, இந்தியாவில் தொற்று நோய் அல்லாத பிற நோய்களை கட்டுப்படுத்துவதில் அரசின் சுமை அதிகரித்து வருவதையும், புகையிலை மற்றும் மதுவின் தீய விளைவுகளிலிருந்து ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதியை உலக மது ஒழிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதியும், நியாயமான விலையில் மருந்துகளும் எளிதில் கிடைக்கச் செய்வதே இந்தியாவின் முக்கிய இலக்காகும் என்று அன்புமணி கூறினார்.