ரூ.22.83 லட்சம் நிதி மோசடி செய்த குற்றத்திற்காக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சுமித்ரா சென்-இன் பதவியைப் பறிக்குமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 1993 இல் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கு ஒன்றில், பயிற்சி வழக்கறிஞராக இருந்த சுமித்ரா சென்-ஐ ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் சில சொத்துக்களைப் பெறுபவராக கொல்கத்தா உயர் நீதிமன்றம் நியமித்தது.
அப்போது, முறைகேடாக ரூ.23.83 லட்சம் பணத்தை கட்சிக்காரரின் வங்கிக் கணக்கில் இருந்து தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு சுமித்ரா சென் மாற்றிக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் 2003 இல் சுமித்ரா சென் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்பட்டார்.
இந்த நிலையில் சுமித்ரா சென் மீதான குற்றச்சாற்று நிரூபணமானதைத் தொடர்ந்து, அவரைப் பதவி விலகும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அவர் மறுத்துவிடவே, தற்போது சென்-இன் பதவியைப் பறிக்குமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. நாடாளுமன்றத்தில் பதவி பறிப்புத் தீர்மானம் கொண்டுவந்து மட்டுமே அந்த நீதிபதிகளை பதவிநீக்க முடியும்.
இதனடிப்படையில், சுமித்ரா சென்-இன் பதவியைப் பறிப்பதற்கான பரிந்துரை சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இருந்து தனக்குப் பரிந்துரைக் கடிதம் கிடைத்துள்ளது என்பதை சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் இன்று உறுதி செய்தார். இந்தப் பரிந்துரையை அவர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவிட்டார்.
இதன்படி நாடாளுமன்றக் கூட்டு அமர்வில் பதவிப் பறிப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியமர்த்தும் அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவர் சுமித்ரா சென்-ஐப் பதவி நீக்குவார்.
முன்னதாக, கடந்த 2006 இல் கொல்கத்தா உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் குழு நடத்திய விசாரணையில் சுமித்ரா சென்-இன் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நீதித்துறைப் பணியில் இருந்து தடுத்து வைக்கப்பட்டார்.
இதையடுத்து, அரசியல் அமைப்புச் சட்டப்படி சுமித்ரா சென்-ஐப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து கடந்த ஆகஸ்ட் 4 இல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளார்.