ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்குப் பிறகு கடந்த ஜூலை 11 முதல் ஆளுநர் ஆட்சி நடந்து வரும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பிரிவினைவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தேசிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று கூட்டியது.
ஸ்ரீநகரில் நடந்த இந்தக் கூட்டத்தில், தேர்தலிற்குத் தடையாக உள்ள பிரச்சனைகள் குறித்தும், தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தேர்தல் ஆணையம் கேட்டறிந்தது.
இந்தக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, பா.ஜ.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் (INC), தேசியவாதக் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய 7 தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநில கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி, தேசிய சிறுத்தைகள் கட்சி மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.