பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், மினரல் மற்றும் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1.50 கோடி வழங்கப்பட்டது.
ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (STC) சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அரவிந்த் பண்டாலை மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத்திடம் வழங்கினார்.
இதேபோல், மினரல் மற்றும் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் (MMTC) சார்பில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சஞ்சீவ் பட்ரா அமைச்சர் கமல்நாத்திடம் வழங்கினார்.
பீகாரில் கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை, வெள்ளத்தினால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
ஏறக்குறைய பீகார் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையான நிவாரண உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.