அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு அளித்துள்ள விலக்குடன் கூடிய அனுமதி, அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நுழைவதற்கான பாஸ்போர்ட் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், இதர அணு சக்தி தொழில்நுட்ப வழங்கு நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, "இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்திற்கு பன்னாட்டு அணு சக்தி முகமை அளித்துள்ள ஒப்புதல், அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு அளித்துள்ள விலக்குடன் கூடிய அனுமதி ஆகியவை, அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நுழைவதற்கான பாஸ்போர்ட்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைப்பதற்காக நாம் காத்திருக்கிறோம். அதற்குப் பிறகு இதர அணு சக்தி தொழில்நுட்ப வழங்கு நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.