பிரிவினைவாத அமைப்புகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன்றாவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் சாலைகள் அனைத்தும் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகளும், வர்த்தக நிறுவனங்களும், வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் காவல் படையினரும், மாநிலக் காவல்துறையினரும் தானியங்கி ஆயுதங்கள், தடிகள் ஆகியவற்றுடன் ரோந்து வருகின்றனர்.
அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் சில திறந்திருந்தாலும், ஊழியர்கள் யாரும் இல்லாததால் பணிகள் ஏதும் நடக்கவில்லை.
இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் ஹூரியத் மாநாட்டு அமைப்புகள், மத அமைப்புகள், சில தொண்டு நிறுவனங்கள் ஆகியவை பங்கேற்றுள்ளன.
சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரிவினைவாத அமைப்புகளின் தொண்டர்கள், ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கண்டித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் சென்று வர்த்தகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். .
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தேர்தல் நடத்துவதை தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் எதிர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுச் சிறையில் பிரிவினைவாத தலைவர்கள்!
மிதவாத ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாஸ் மெளல்வி உமர் பரூக், ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணிக் கட்சித் தலைவர் முகமது யாசீன் மாலிக் ஆகியோர் உட்பட பிரிவினைவாத அமைப்புகளின் முக்கியத் தலைவர்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களைச் சந்திப்பதற்கு, பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் உட்பட யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை. வீட்டுச் சிறையில் உள்ளவர்களின் வீடுகளின் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.