மேற்கு வங்க மாநிலத்தில் டாடா கார் தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தியது தொடர்பான பிரச்சனை நேற்று முடிவுக்கு வந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, நேற்று இரவு போராட்டத்தை விலக்கிக் பெறுவதாக அறிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து வந்த பிரச்சனை, மேற்கு வங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தியின் முன் முயற்சியால் முடிவுக்கு வந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூர் என்ற இடத்தில் டாடா மோட்டார் நிறுவனம் நானோ ரக கார்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து வருகிறது.
இந்த தொழிற்சாலையை அமைப்பதற்காக ஆயிரம் ஏக்கர் நிலத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வழங்கியது.
இதில் விவசாயிகளிடம் இருந்து 400 ஏக்கர் விளை நிலத்தை, மேற்கு வங்க அரசு பலவந்தமாக பிடிங்கி கொண்டு விட்டது. இதை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன.
இதன் உச்சகட்டமாக கடந்த பதினைந்து நாட்களாக கார் தொழிற்சாலையின் எதிரே தர்ணா போராட்டம் நடத்தி வந்தன.
இதனால் துர்காபூர் தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இத்துடன் கார் தொழிற்சாலையின் பணிகளும் நிறுத்தப்பட்டன.
இந்த தொழிற்சாலை இயங்குவதற்கு சுமுகமான நிலை ஏற்படாவிட்டால், கார் தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றவும் தயங்க மாட்டோம் என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா எச்சரித்தார்.
இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக மாநில ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி தலையிட்டு மாநில அரசு பிரதிநிதிகளையும், திரிணாமுல் காங்கிரஸ் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை நேற்று இரவு முடிவுக்கு வந்தது.
ஆளுநர் முன்னிலையில் நடந்த இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், நஷ்டஈடு கொடுக்காத விவசாயிகளுக்கு, கையகப்படுத்திய நிலத்திற்கு பதிலாக, நானோ கார் தொழிற்சாலை வளாகத்திற்குள்ளேயே நிலம் வழங்கப்படும்.
இந்த தொழிற்சாலை வளாகத்தில், டாடா மோட்டார் நிறுவனத்திற்காக, உதிரி பாகங்களை வழங்கும் நிறுவனங்களின் கட்டுமானப்பணி உடனடியாக நிறுத்தப்படும். விவசாயிகளுக்கு நிலம் திரும்ப வழங்குவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலை முன்பு கடந்த பதினைந்து நாட்களாக நடந்த தர்ணா போராட்டத்தை உடனடியாக விலக்கிக் பெறுவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
வெள்ளிக்கிழமை முதல் நடந்து வந்த பேச்சுவார்த்தையில், நேற்று முடிவு எட்டப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் நிலவியது. ஆனால் கடைசி நேரத்தில் மம்தா பானர்ஜி, விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்தை கட்டாயமாக திருப்பி கொடுத்தே தீர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இதனால் பேச்சுவார்த்தை முறியும் நிலையை எட்டியது.
ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி தலையிட்டு மம்தா பானர்ஜியை சமாதானப்படுத்தினார். இதற்கு பிறகே பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.