அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம் (என்.எஸ்.ஜி.) விலக்குப் பெறுவதற்காக, அணு ஆயுத சோதனை நடத்தும் நமது சட்டப்பூர்வமான உரிமை விட்டுத்தரப்படவில்லை என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அனில் ககோட்கர், என்.எஸ்.ஜி. (Nuclear Suppliers Group - NSG) நமக்கு அளித்துள்ள விலக்கலில் (Waiver) எந்த இடத்திலும் அணு ஆயுத சோதனை பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்று கூறினார்.
“அணு ஆயுத சோதனை பற்றி நாங்கள் எந்தவிதமான உறுதியையும் அளிக்கவில்லை, நாம் கடைபிடித்துவரும் சுய கட்டுப்பாடு குறித்து மட்டுமே தெரிவித்துள்ளோம், இந்த விலக்கு அணு ஆயுத பரவல் தொடர்பான நமது நடவடிக்கைகளுக்கும், நமது எரிசக்தி தேவையின் அவசியத்தை கருத்தில் கொண்டும் அளிக்கப்பட்டுள்ளது” என்று அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு விலக்கு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பு நாடுகளுக்கு எப்படிப்பட்ட உறுதிகள் அளிக்கப்பட்டது அல்லது நிபந்தனைகள் ஏற்கப்பட்டது என்று செய்தியாளர்கள் வினவியதற்கு பதிலளித்த ககோட்க்ர், “குறிப்பிடத்தக்க எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை, நமது நாட்டிற்கு விலக்கு அளிக்கும் அறிக்கை வெளியிடப்பட்டப் பின்னர் நீங்கள் பாருங்கள், அது அனைத்தும் நேரடியான தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
எப்படிப்பட்ட விலக்கை இந்திய அணு சக்தி ஆணையம் எதிர்ப்பார்த்தோ அதற்கேற்ற வகையிலேயே விலக்கு கிடைத்துள்ளது என்றும் ககோட்கர் கூறினார்.