பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குள் சென்று வர்த்தகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கும் விவகாரத்தில் ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதி அமைப்பிற்கும் ஜம்மு- காஷ்மீர் அரசிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஜம்முவில் இயல்பு நிலை திரும்பினாலும், அந்த உடன்பாட்டை எதிர்த்துப் பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டத்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றம் நீடிக்கிறது.
ஸ்ரீ அமர்நாத் கோயிலிற்குத் தற்காலிகமாக நிலம் வழங்குவதாக இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் சென்று வர்த்தகம் செய்யத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகிறது.
இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இன்று கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் எதுவும் இன்றிச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இயங்கும் சிலவற்றிலும் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புல்வாமா, குல்காம், அனந்த்நாக், பட்காம், கண்டெர்பால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.