நாட்டின் கிராமப்புற, புறநகர்ப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை அளிக்கும் அப்பல்லோ ரீச் மருத்துவமனைகளை பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் இந்த விழாவில் உரையாற்றிய அவர்,"இந்தியா போன்ற நாட்டில் மருத்துவ வசதியை அளிப்பது என்பது சிக்கலான சவால். நல்ல உடல் நலன் என்பது வெறும் மருத்துவ வசதி மட்டுமல்ல. அது சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து போன்ற பல்வேறு அம்சங்களை சார்ந்துள்ளது.
நோய்களுக்கும், உடல்நலக் குறைவுக்கும் எதிரான போர் என்பது முக்கியமாக வறுமையையும் அதன் தீமைகளையும் எதிர்ப்பதுதான் என்று ஜவஹர்லால் நேரு கூறினார்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புடன் மருத்துவ வசதிக்கும் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் கிராமப்புறங்களில் பொது மருத்துவ வசதியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அரசு பாடுபட்டு வருகிறது. இந்த இயக்கம் ஆக்கபூர்வமான பலன்களை அளிக்கத் துவங்கியிருக்கிறது.
தரமான மருத்துவ வசதியை நியாயமான கட்டணத்தில் மக்களுக்கு அளிக்கும் பொறுப்பு அரசை மட்டுமே சார்ந்தது அல்ல. நமது நாட்டில் மருத்துவ வசதிகளை அளிப்பதில் தனியார் துறை பெரும் பங்காற்றி வந்துள்ளது. கிராமத்தில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை அளிப்பது முதல் நகரங்களில் உயர்தர சிறப்பு மருத்துவமனைகள் அமைப்பது வரை தனியார் துறை மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறது.
நமது நாட்டில் பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் தரமான சிறந்த மருத்துவ வசதிகளை அளிக்கவுள்ள அப்பல்லோ ரீச் மருத்துவமனைகளை துவக்கியுள்ளதற்காக பாராட்டுகிறேன்" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.