அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (என்.பி.டி.) கையெழுத்திடாத இந்தியாவிற்கு ஏன் அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள விலக்குடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று என்.எஸ்.ஜி. உறுப்பு நாடுகள் சில கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவதில் உறுதியாக உள்ளதாகவும், அணு ஆயுதச் சோதனை தொடர்பாக எங்களுக்கு நாங்களே விதித்துக்கொண்டுள்ள சுயக் கட்டுப்பாட்டை (Unilateral Moratorium) முழுமையாகப் பின்பற்றுவோம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள விலக்குடன் (Waiver) கூடிய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி இந்தியா சார்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மான வரைவில், தங்களது வலியுறுத்தலின்பேரில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் மீது இன்று அணு சக்தித் தொழில்நுட்ப வணிகக் குழு (Nuclear Suppliers Group - NSG) இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
இந்த நிலையில், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள அறிக்கையில், "அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என்பதிலும், எந்தச் சூழ்நிலையிலும் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதில்லை என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது. அணு ஆயுதச் சோதனை தொடர்பாக எங்களுக்கு நாங்களே விதித்துக்கொண்டுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றுவோம்." என்று கூறியுள்ளார்.
"அணு ஆயுதப் போட்டி உள்ளிட்ட எந்தவிதமான ஆயுதப் போட்டியிலும் பங்கேற்க மாட்டோம். அணு எரிபொருள் செறிவூட்டல், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு சுழற்சி செய்தல் ஆகிய தொழில்நுட்பங்களை அணு ஆயுத தொழில்நுட்பம் பெறாத நாடுகளுக்கு அளிக்கும் நாடாக இந்தியா இருக்காது என்று உலக நாடுகளுக்கு உறுதியளிக்கிறோம்" என்றும் பிரணாப் கூறியுள்ளார்.
மேலும், "அணு சக்தி தொழில்நுட்பத்தை அமைதி தேவைகளுக்காக விற்கும் நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது. குறிப்பாக, தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்களை உலகிற்கு வழங்கவும், இந்தியாவிற்கு பலனளிக்கும் வகையிலான சர்வதேச அளவிலான எரிபொருள் தொகுப்பு உருவாக்கப்படுவதையும் நாங்கள் விரும்புகிறோம்." என்று பிரணாப் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இன்றைய என்.எஸ்.ஜி. கூட்டத்தின் முதல் சுற்றுப் பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இன்னும் சில நாடுகள் இந்தியாவிற்கு விலக்குடன் அனுமதி வழங்குவதில் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நாடுகளின் பிரதிநிதிகளை இந்தியாவின் உயர் அதிகாரிகள் சந்தித்துத் தங்களின் நிலைப்பாட்டை விலக்கியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.