ஆசிரியர்களுக்கான தேசிய இணையதளத்தை (national portal) ஒன்றை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று துவக்கி வைத்தார்.
டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த ஆசிரியர் தின நிகழ்ச்சியின் போது www.teachersofindia.org என்ற இந்த இணையதளத்தை அவர் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய பிரதீபா பாட்டீல், பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த இந்த இணையதளம் நிச்சயம் ஒரு சாதனமாக இருக்கும் என்றும் வகுப்பறையில் ஆசிரியர்-மாணவர் கலந்துரையாடல் மேலும் முன்னேற்றமடையும் என்றும் கூறினார்.
தேசிய அறிவுத் திறன் ஆணையமும், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையும் இணைந்து ஆசிரியர்களுக்கான இந்த இணையதளத்தை உருவாக்கி உள்ளன.
ஆசிரியர்களுக்கான இந்த இணையதளம், ஆசிரியர்கள் தங்களது சிறந்த அனுபவங்களை, எண்ணங்களை, கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், ஆசிரியர் சமுதாயத்தில் கலந்துரையாடலை உருவாக்கும் தளமாகவும் விளங்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் சிறந்த ஆசிரியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களைப் பற்றிய விவரம் இணையதளத்தின் முதல் பக்கத்தில் (Home page) பிரசுரமாகும்.
அடுத்த சில மாதங்களில் இந்த இணையதளம் பல்வேறு மொழிகளில் உள்ளடக்கத்தை வழங்கும். மேலும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் உள்பட மற்றவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கும்.