கலவரங்களால் பதற்றம் நீடிக்கும் நிலையில், கொல்லப்பட்ட லக்ஷ்மானந்தா சரஸ்வதியின் அஸ்தி விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் (வி.எச்.பி.) தலைவர் பிரவீன் தொகாடியா தலைமையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரிசா மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களை உடனடியாகத் தடுக்க அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்றும், கலவரங்கள் குறித்து மத்தியப் புலனாய்வுக் கழகம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி கட்டாக் மாவட்டத் தலைமை ஆயர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், ஒரிசாவில் தொடர்ந்து நடக்கும் கலவரங்களினால் பதற்றம் நீடிக்கும் நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட விஎச்பி தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதி உள்ளிட்ட 5 பேரின் அஸ்தியுடன் ஊர்வலம் நடத்த அவ்வமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியாவிற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு, இதுகுறித்து விளக்கமளிக்கும்படி ஒரிசா அரசிற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "மதக் கலவரங்களால் பதற்றம் நீடிக்கும் சூழலில், வி.எச்.பி. அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா தலைமையிலான ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க மாட்டோம்." என்று உறுதியளித்தது.
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கலவரத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
முன்னதாக அரசின் மனுவில், "கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை ராணுவத்தினரும், மாநிலக் காவல்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்திருந்தது.