இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்துமானால் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ரத்தாகும் என்று அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களை ஏமாற்றிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் குற்றம்சாற்றியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்துமானால் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ரத்தாகும் என்று கூறியிருப்பது பற்றிப் பிரகாஷ் காரத்திடம் கேட்டதற்கு, "இது எங்களுக்கு மூன்று மாதத்திற்கு முன்பே தெரியும். நமது நாட்டு மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டது" என்றார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றிய உண்மைகளை முழுமையாக மக்களிடம் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறைத்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாற்றினார்.
"தற்போது சிறிது உண்மைதான் வெளிவந்துள்ளது. விரைவில் முழு உண்மைகளும் வெளியில் வரும். அதற்குள், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த, அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள விலக்குடன் கூடிய அனுமதி கேட்டு அணு சக்தி தொழில்நுட்ப நாடுகள் (NSG) குழுவிடம் தனது சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவை இந்தியா திரும்பப்பெற வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய நிலவரப்படி இந்தியா அமெரிக்காவின் கைப்பிடியில் உள்ளது என்ற பிருந்தா காரத், அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இனி எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று நாம் அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.