அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் நாட்டிற்கும், நாடாளுமன்றத்திற்கும் தவறான தகவல்களை மத்திய அரசு அளித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாஜக, இதற்காக மன்மோகன் சிங் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மன்மோகன் அரசு தனது அலுவலைத் தொடரக்கூடாது. உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றார்.
இரு அவைகளுக்கும் தவறான தகவல் தந்து மத்திய அரசு அவை உரிமைகளை மீறியுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். அரசு பதவி விலகாவிட்டால், இந்த குறுகிய அவகாசத்திற்குள் பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சனை எழுப்பும் சாத்தியக் கூறுகளை பாஜக மேற்கொள்ளும் என்றார் அவர்.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் இன்னும் நிறைவேறாத நிலையில், இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால் அணு எரிபொருள் வழங்குவது உள்ளிட்ட ஏனைய ஒத்துழைப்புகளும் நிறுத்தப்படும் என்ற அமெரிக்கா நிபந்தனை விதித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகளும், எதிர்க்கட்சியான பாஜகவும் பிரச்சனைகளை எழுப்பலாம் என்று கருதப்படுகிறது.