விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக, நானோ ரக கார் தயாரிப்புத் தொழிற்சாலையை சிங்கூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற டாடா நிறுவனம முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் குறைந்த விலையில் நானோ ரக கார் தயாரிக்கும் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைத்து வருகிறது.
இதற்காகக் கையகப்படுத்தி உள்ள 1,000 ஏக்கர் நிலத்தில், 400 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை விவசாயிகளுக்குத் திருப்பி வழங்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
பொறியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரைப் பணியாற்ற விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்ததால், கார் தொழிற்சாலையின் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்த பிரச்சனைக்கு முடிவு காண முயன்ற மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிங்கூர் நிலப் பிரச்சனையில் தொடர்புடைய அனைவரும், இதனால் ஏற்பட்டுள்ள சமூக பாதிப்புக்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து மம்தா பானர்ஜி, தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் போராட்டம் தொடரும் என்று அறிவித்தார்.
இன்று தொடர்ந்து பத்தாவது நாளாக கார் தொழிற்சாலைப் பணிகள் முடங்கின.
இந்நிலையில், சிங்கூரில் நடந்து வரும் நானோ ரகக் கார்த் தொழிற்சாலைப் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்தி விட்டதாகவும், தொழிற்சாலை அமைக்க வேறு இடம் பார்க்குப் பணிகளில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.