பீகாரைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பெய்து வரும் கடும் மழை, வெள்ளத்தினால் இதுவரை 1.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நமது நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திராவில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், திப்ருகார்க், சோனிட்பூர், துப்ரி, ஜார்ஹட், கம்ருப் ஆகிய மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 31இல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அது இணைக்கும் ஊர்களனைத்தும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கோல்காட் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கஜிரங்கா தேசியப் பூங்காவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. காண்டாமிருகக் குட்டி ஒன்று இன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மற்ற விலங்குகளைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருவதாகப் பூங்கா இயக்குநர் எஸ்.என். புராகோஹைன் தெரிவித்தார்.
சமவெளிகளில் உள்ள 176 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.