மணிப்பூர் மாநில முதல்வர் ஓக்ராம் சிங்கின் வீடு மீது தீவிரவாதிகள் எறிகணைகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் முதல்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மணிப்பூரில் முதல்வர் ஓக்ராம் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இம்பாலில் உள்ள அவரது வீட்டின் மீது நேற்று இரவு 9.00 மணியளவில் தீவிரவாதிகள் எறிகணை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஓக்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் உயிர் தப்பினர். வீட்டின் சுற்றுச் சுவர்கள், வீட்டு வளாகத்திற்குள் உள்ள சிறிய கோயில் ஆகியவை சேதமடைந்தன.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். இம்பால் நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
புரட்சிகர மக்கள் கட்சி என்ற தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலிற்கு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக 2003, 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த கொலை முயற்சிகளில் ஓக்ராம் சிங் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.