இந்த ஆண்டு இறுதியில் மின்னணு ஏலம் வாயிலாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின், நமது நாட்டில் உள்ள 5000 வட்டாரங்கள் கம்பியில்லா அகண்ட அலைவரிசையில் இணைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் யுனிவர்செல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்ட் உதவியுடன் இந்தப் பணி நிறைவேற்றப்படும்.
தாலுகா/ஒன்றிய தலைமையகத்தில் இருந்து 10 கிமீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் கம்பியில்லா அகண்ட அலைவரிசை இணைப்பு தரப்படுவதால், பள்ளிகள், பொது சுகாதார மையங்கள், கிராம பஞ்சாயத்துக்கள், சமூக பணி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பயனடையும். இதனால் கிராமப் பகுதிகளுக்கு மின்னணு நிர்வாகத்தையும், டேடா சேவைகளையும் அளிக்க முடியும்.
சென்ற மாத இறுதியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான விரிவான நெறிமுறைகளை வெளியிட்டது. இந்தப் பணி இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பியில்லா அகண்ட அலைவரிசை திட்டம் தொடர்பாக தொலைத் தொடர்புத் துறையானது, தொழில்நுட்பத்தை அளிப்பவர்கள், தொலைத் தொடர்பு சேவையை அளிப்பவர்கள், இன்டர்நெட் சேவை அளிப்பவர்கள் ஆகியோரை கலந்தாலோசித்து ஏலம் விடும் முறைகள் மற்றும் பிற செயல்பாடுகளை இறுதி செய்துள்ளது.
இதற்கான ஆலோசகர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சுகாதாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் தேவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைப் போலவே வட்டார வாரியாக கிராமங்களின் தேவைகளும் கண்டறியப்பட்டு, தேவையான உள்கட்டமைப்பை தயாராக வைக்கும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
நமது நாட்டில் உள்ள 6,000 வட்டாரங்களில் 1,000 வட்டாரங்களுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே, அமைக்கப்படவிருக்கும் ஒரு லட்சம் பொது சேவை மையங்களில் 50,000 மையங்களுக்கும் இந்த இணைப்பு தரப்பட்டு வருகிறது.