அண்மையில் சில ஊடகங்களில், வேகன் பற்றாக்குறையால் நிலக்கரியை ஏற்றிச் செல்ல முடியவில்லை என்று வந்திருந்த செய்திகளை மறுத்துள்ள ரயில்வே அமைச்சகம், வேகன்கள் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், இந்திய நிலக்கரி நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் திட்டமிட்டதைவிட நாளன்றுக்கு 38 வேகன்கள் குறைவாக நிலக்கரியை எடுத்துச் சென்றுள்ளன.
இதனால் கிழக்கு மத்திய ரயில்வேயில் 20 காலி வேகன்களும், தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் 30 காலி வேகன்களும், கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 10 காலி வேகன்களும், நிலக்கரி ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படாமல் இருந்தன" என்று கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், இந்திய நிலக்கரி நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் நாள் ஒன்றுக்கு 195 வேகன் நிலக்கரியை எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தன. ஆனால் நாள் ஒன்றுக்கு 142 வேகன்கள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிறுவனங்களிலிருந்து ரயில்வே கிடங்குக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல முடியாததும் காரணமாக இருக்கலாம்" என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.