பீகாரில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளத்தினால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகளிலும் இந்திய ராணுவத்தின் முப்படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழையினால் ஆறுகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிறைந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஏறக்குறைய பீகார் மாநிலத்தின் எல்லா மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த மாநிலத்தின் முக்கிய ஆறான கோசி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதன் கரையோர மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கு வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கோசி ஆற்று வெள்ளம் இன்று சுபால், அரோரியா, மாதேபுரா ஆகிய மாவட்டங்களுக்கும் பரவியதை அடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வானொலி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
நூற்றுக்கணக்கான கிராமங்கள் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு வசிக்கும் மக்களைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை மூலம் வெளியேற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். முப்படையையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் வினியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக விரோதிகள் கொள்ளை!
இதற்கிடையில், மக்கள் இல்லாமல் காலியாக உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் வேலையில் சமூகவிரோதிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குடிக்கத் தண்ணீர் இன்றி, உண்ண உணவின்றித் தவித்து வரும் மக்கள், தாங்கள் விட்டு வந்துள்ள சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளச்சூழல் ஒருபுறம் இருந்தாலும், காவலர்கள், அதிகாரிகள் பற்றாக்குறையே குற்றங்கள் பெருகக் காரணம் என்று பொது மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர். இதை ஒப்புக்கொண்டுள்ள மாநில அரசு, வெள்ளம் வடிந்து நிலைமை சீரடைந்த பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.
மழை, வெள்ளத்திற்கு இதுவரை 117 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அரசு தெரிவித்துள்ளது.