தனது செல்பேசியை சார்ஜ் செய்துகொள்ள மறுத்த ஒரு குடும்பத்தினரை மிரட்ட காஷ்மீர் காவல் அதிகாரி கொண்டு சென்ற கையெறி குண்டு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமுற்றனர்.
அதிர்ச்சியூட்டும் இந்த நிகழ்வு தெற்கு காஷ்மீரில் நடந்துள்ளது. புல்வாமா மாவட்டதின் கெல்லர் எனுமிடத்திலுள்ள குலாம் மொய்தீன் வானி என்பவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அம்மாநில சிறப்பு காவல் அதிகாரி அஸ்வானி, தனது செல்பேசியை சார்ஜ் செய்துகொள்ள அனுமதி கோரியுள்ளார். அதற்கு குலாம் மொய்தீன் மறுத்துவிட, அருகிலுள்ள தனது முகாமிற்குச் சென்ற அஸ்வானி, அங்கிருந்து ஒரு கையெறி குண்டை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் அந்த வீட்டிற்குள் நுழைந்து, அவர்கள் இருக்கும் அறையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். குலாம் குடும்பத்தினரை மிரட்ட வைத்த அந்தக் கையெறி குண்டு எதிர்பாரா விதமாக வெடித்ததில் குலாம், அவரது மனைவி நசிமா பானு, அப்துல் கையூம் காண்டே, ரூபி ஜேன், ஜேன் மொஹம்மது ஆகியோர் காயமுற்றனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமுற்ற ஐந்து பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென செய்திகள் தெரிவிக்கின்றன.
வீட்டிற்குள் புகுந்த காவல் அதிகாரி அஸ்வானியை கொல்வதற்கு வெளியில் இருந்து கையெறி குண்டு வீசப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. ஆனால் அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததை அடுத்து காவல் அதிகாரி அஸ்வானி தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனியார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காகவே காவல் அதிகாரி அஸ்வானி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.