''தமிழக - கர்நாடக எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே மத்திய அரசு அணை கட்ட வேண்டும்'' என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
நெல்லையில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தென்மண்டல மாநாடு மற்றும் காமராஜரின் 106-வது பிறந்த நாள் விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நெல்லைக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் வாங்கி போட்டியிட்டோம். அதில் தோல்வி அடைந்தோம். இதுவரை ஜெயலலிதாவுக்கும், எனக்கும் எந்தவிதமான கருத்து மோதலும் இருந்தது கிடையாது. சீரான நல்ல உறவு கடந்த காலத்தில் இருந்து உள்ளது. கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் பேசுவார்கள். தேர்தல் வரும்போது இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஒகேனக்கல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நான் பிரதமராக இருந்தபோது ஆலோசனை கூறினேன். அதாவது இரு மாநில எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும்.
அந்த அணை கட்டுவதற்கான செலவுத்தொகையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை அந்த அணையில் தேக்கிவைத்து தேவையான போது பயன்படுத்த வேண்டும். இரு மாநிலங்களுக்கும் இடையே அமைதியான நிலை நீடிக்க வேண்டும். அதற்கு அந்த அணை தீர்வாக அமையும் என்று தேவகவுடா கூறினார்.