ஒரிசாவில் பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்டத்தில் இன்று நடந்த கலவரங்களில் 24 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், இன்று கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சடலங்களுடன் கடந்த ஒருவார கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதி சாமி உள்ளிட்ட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களால், பதற்றம் தொடர்கிறது. கந்தமால் மாவட்டத்தில் கோச்சபடா பஞ்சாயத்திற்கு உட்பட்ட கனிபாலி, பக்துங்ரி, கட்ரின்ஜியா உள்ளிட்ட கிராமங்களில் இன்று அதிகாலை நடந்த கலவரங்களில் 24 வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
மேலும், பெட்டபங்கா என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள ராய்க்கியா என்ற பகுதியில் இன்று 2 சடலங்கள் மிகவும் மோசமாகச் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்துடன் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் கலவரங்களில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து புல்பானி நகரம், பலிகுடா, துமுடிபந்தா, பர்காமா, ராய்கா, ஜி.உதய்கிரி, டாரிங்பாடி, டிகாபலி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில் 10 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த 5,000 பேர் வன்முறைக்கு பயந்து காடுகளுக்குள் பதுங்கியிருப்பதாகவும், காடுகளில் இருந்து திரும்பிய 10,000 பேர் தங்குவதற்கு வீடுகள் இல்லாமல் தற்காலிக முகாம்களில் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.