'வாக்கிற்கு லஞ்சம்' விவகாரம் போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தைவிட மிகவும் மோசமானது என்று கூறியுள்ள பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்குத் தெரியாமல் நடந்திருக்காது என்று குற்றம்சாற்றியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று பா.ஜ.க.வின் சார்பில் நடந்த 'ஆளுமையும் அரசியலும்' என்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய எல்.கே. அத்வானி, "வாக்கிற்கு லஞ்சம் விவகாரம் அரசின் தலைமை, காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆகியவற்றிற்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் மெளனத்தைக் கலைக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது" என்றார்.
வாக்கிற்கு லஞ்சம் விவகாரத்தை விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு உண்மையை வெளிக்கொணரும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்த அத்வானி, "இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்க முயற்சிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர்களை எச்சரிக்க விரும்புகிறேன். அப்படி- போஃபர்ஸ் வழக்கில் கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையின்போது செய்யப்பட்டது போல- ஏதாவது செய்தால் அதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கிறேன்" என்றார். போஃபர்ஸ் விவகாரம் நடந்தது 1989; வாக்கிற்கு லஞ்ச விவகாரம் வந்துள்ளது 2009 என்றார் அத்வானி.
1999 இல் பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு வாக்கில் தோற்றபோது கூட, குதிரைப் பேரம் எதுவும் நடக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்ற நாங்கள் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாக எங்களின் எதிரிகளால் கூட குற்றம்சாற்ற முடியவில்லை. நல்லாட்சி தருவதிலும், நல்ல ஆளுமையை பின்பற்றுவதிலும் பா.ஜ.க. உறுதியாக இருந்தது என்றார் அத்வானி.