பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இந்திய ரயில்வே சார்பில் ரூ.90 கோடி வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது ஒரு மாத சம்பளம், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக கிடைத்த 1 கோடி ரூபாய் ஆகியவற்றை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தருவதாகவும், இதேபோல ரயில்வே ஊழியர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், நாட்டு மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற தொகையை பீகார் வெள்ள நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.