நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கு ஜிகாபிட் அகண்ட அலைவரிசை தொடர்பை அளிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா கூறினார்.
புது டெல்லியில் நடந்த கணினி துறையில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு 5-வது விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆ.இராசா,
"சமூக மாற்றத்திற்கு முக்கியமான கருவி கல்வியாகும். தற்போது கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதோடல்லாமல் மாணவர்களின் திறமை மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்குக் காரணம் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியே ஆகும். நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உலகத்தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு மற்றும் தகவல்களை அளிப்பது அவசியம் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது.
கல்வி மற்றும் பிற சேவைகளை இணையதளம் மூலம் அனைவருக்கும் அளிப்பதற்காக தேசிய இ-கவர்னன்ஸ் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் 6 லட்சம் கிராமங்களை இணைக்கும் வகையில் 1 லட்சம் கிராம இணையதள மையங்களை (பொது சேவை மையம்) அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அரசு சேவைகள், தனியார் சேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
ஆயினும் ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 1000 மக்களுக்கு 11 கணினி என்ற தற்போதைய விகிதத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றார்.